பொங்கல் பண்டிகை.. கூடுதல் 2 நாட்கள் விடுமுறை.. எதிர்பார்க்கும் மக்கள்- தமிழக அரசு ஆலோசனை..!

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்றுவர ஏதுவாக கூடுதலாக இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலால், மக்கள் எந்த ஒரு பண்டிகையும் சிறப்பாக கொண்டாடவில்லை. ஆனால், இந்த முறை தீபாவளி பண்டிகையின்போது, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அதற்கு அடுத்த நாளும் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து, தீபத்திருநாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டு புத்தாண்டிற்கு அடுத்த நாளான ஜனவரி 2 ஆம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல எதுவாக இருக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. போகி பண்டிகை, மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் அரசு விடுமுறை வரவுள்ளது. ஜனவரி 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது. ஆனால், மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால், ஜனவரி 13ஆம் தேதியும், பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு ஜனவரி 18ஆம் தேதியும் சிறப்பு கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஆலோசனை நடத்தி அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.