பிளஸ் 2 மாணவி பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை-உறவினர்கள் சாலை மறியல்..

திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிப்பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் உணவு அருந்திய பின்னர், தற்கொலை செய்துக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம் என்பவரது மகள் சரளா , இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே விடுதியின் அறையில் உடன் இருக்கும் சக நண்பர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், அறையில் மாணவி சரளா தனியாக இருந்துள்ளார். அப்போது மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரந்து வந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திர தாசன், காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட எஸ்.பி , திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி மற்றும் மாணவியின் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியின் இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் அளிக்கவில்லை என கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி – பொதாட்டூர்பேட்டை சாலையில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.