தேசத்தின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத்தந்துள்ளனர் என திரௌபதி முர்மு உரை.
இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாட்டின் 15-வது குடியரசு தலைவராக பதவியேற்ற பிறகு பேசிய திரௌபதி முர்மு, குடியரசு தலைவராக பதவியேற்றது பெருமையளிக்கிறது. தம்மை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த எம்பி, எம்எல்ஏக்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி.
நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம். ஏழை வீட்டில் பிறந்த மகள் நான், குடியரசு தலைவராக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தி.
பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன். தன்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோளாக இருக்கும். சுதந்திர போராட்ட வீரர்கள் நாட்டின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க கற்று கொடுத்திருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். கொரோனா காலத்தில் உலகத்திற்கே இந்தியா பெரும் நம்பிக்கையாக திகழ்ந்தது.
அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாரதத்தை கட்டியெழுப்ப முனைப்புடன் செயல்படுவோம். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிபலிப்பு நான். பல ஆண்டுகளாக முன்னேற்றம் காணாத பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் என்னை அவர்களது பிரதிபலிப்பாக பார்க்கலாம். பெண்கள் மேலும் மேலும் அதிக அதிகாரத்தை பெற வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு துறைகளிலும் பெண்களுடைய பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply