பல திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் கைது: 30 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல் துறையினர்

பல திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் கைது: 30 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல் துறையினர்

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 23.02.2023 ஆம் தேதி 35 வயது மதிக்கத்தக்க நபர் சோலார் மின்சாரம் சரி செய்வதாகவும் தான் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட லைன் இன்ஸ்பெக்டர் எனக் கூறி பரமசிவம் வீட்டிலிருந்த சுமார் 9 பவுன் நகைகளை திருடி சென்று உள்ளார். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இப்புகாரில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்து எதிரியை தேடி வந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து @ முத்துக்குமார் என்பவர் இக்குற்றத்தில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது. மேலும் மேற்படி நபர் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்தது. இந்நிலையில் தனிப்படை காவல் துறையினர் இவ்வழக்கில் தொடர்புடைய மாரிமுத்து@ முத்துக்குமார் என்பவரை கைது செய்து, மேற்படி நபர் சூலூர், அன்னூர், கோவில்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் ஆகிய இடங்களில் உள்ள 7 வீடுகளில் திருடிய 30 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அமைத்தனர்.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் செயல்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், எச்சரித்து உள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் தயங்காமல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப் போரின் ரகசியங்கள் காக்கப்படும்.