பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம்..!!

திண்டுக்கல்: தைப்பூசம் திருவிழா இன்று உலகம் முழுவதிலும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறுது.

பார் புகழும் பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முத்துகுமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கடந்த வாரம் முருகன் ஆலயங்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மருதமலை, வயலூர், எட்டுக்குடி முருகன் ஆலயங்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தைப்பூசம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் அலகு குத்தியும் காவடிகள் சுமந்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி திருஆவினன் குடி. இங்கு பால தண்டாயுதபாணியாக காட்சி அளிக்கிறார் முருகப்பெருமான். தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

போகர் சித்தர் பலவித யோக கலைகளை அறிந்தவர். தன்னுடைய சக்தியின் மூலம் காடு மலைகளில் இருந்த மூலிகைகளை சேகரித்தார். அவர் சேகரித்த 4,448 மூலிகைகள் கொண்டு, 81 பாஷாணங்களாக மாற்றினார். அந்த 81 பாஷாணங்களையும் ஒன்பது பாஷாணங்களாகப் பிரித்துக்கொண்டார். அந்த நவபாஷாணங்களையும் மருந்தாக மாற்றினர். நவபாஷாணங்களை கொண்டுதான் முருகப்பெருமான் விக்ரகத்தை உருவாக்கினார் என்று பழனிமலை ஸ்தல புராணம் தெரிவிக்கிறது.

420 அடி உயர மலையில் ஞானதண்டாயுதபாணியாக உள்ளார் முருகப்பெருமான். தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு சகல சுக போகங்களையும் தரக்கூடிய தயாளனாக திகழ்கிறார் தண்டாயுதபாணி. தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாது கையில் தண்டம் ஏந்தி ஆண்டிக்கோலத்தில் மேற்கு நோக்கி அழகாய் காட்சி தருகிறார்.

பழனி மலை மேல் குடிகொண்டிருக்கும் தண்டாயுதபாணி சுவாமியை மனதார வேண்டிக்கொண்டு பால் பிரசாதத்தை, தீர்த்தப் பிரசாதத்தை குடிப்பதன் மூலம் தீராத நோய்கள் தீரும். மனக்கவலைகள் நீங்கி சகல சந்தோஷங்களையும் தருவார் முருகப்பெருமான்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெள்ளி தேரோட்டத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை சமேதராக வலம் வந்தார்.

தைப்பூசத் திருவிழா தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு மேல் நான்கு ரத வீதியில் நடைபெற உள்ளது. தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை, காரைக்குடி, தேனி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். மலையடிவாரத்தில் பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி மற்றும் தீர்த்த குடங்களை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஆடிப்பாடி கிரிவலம் வந்து நேர்த்திக்கடனாக முருகனுக்கு செலுத்தி வருகின்றனர்.

தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது. பக்தர்கள் மலை மீது சென்று விரைவாக சாமி தரிசனம் செய்து வரும் வகையில் படிவழிப்பாதை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.