அமைதிக்கான நோபல் பரிசு-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயர் பரிந்துரை.!!

நார்வே:இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.

எனவே அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறை காலத்தை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரினால் உக்ரைனில் இருந்து 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நாவுக்கான புலம் பெயர்வோர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனுக்குள் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பிற பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் நகரங்களில் கிடக்கும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய பல ஆண்டு காலம் ஆகும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது, இல்லையெனில் போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷ்யா மீண்டு வர பல தலைமுறைகள் எடுக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் கமிட்டிக்கு பல இந்நாள், முன்னாள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 3 முதல் 10ஆம் தேதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாகவும், எனவே அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறை காலத்தை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.