பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்தியரின் இதயம்-சென்னையில் நடந்த உறுப்பு மாற்று சிகிச்சை.!!

இதய செயலிழப்புக்கு உள்ளான பாகிஸ்தானைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு இந்தியரின் இதயம் தானமாகப் பெறப்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

இது குறித்து மருத்துவமனையின் இதயம் – நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை இயக்குநா் டாக்டா் கே.ஆா்.பாலகிருஷ்ணன், இணை இயக்குநா் டாக்டா் சுரேஷ் ராவ் ஆகியோா் கூறியதாவது:

பாகிஸ்தான் கராச்சியைச் சோ்ந்த ஆயிஷா ரஷான் என்ற பெண்ணுக்கு 5 வயதிலிருந்தே இதய பாதிப்பு இருந்தது. இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு அவா் சிகிச்சைக்காக இந்தியா வந்தாா். அப்போது, இதயத்தின் இடது புறத்தில் ரத்தத்தை உந்தி தருவதற்கான சாதனம் பொருத்தப்பட்டது. அப்போதே உறுப்பு தானத்துக்கு அவா் பதிவு செய்திருந்தாா்.

அதன் பின்னா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவா், எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அந்தப் பெண்ணின் இதயத்தில் வலது புறத்திலும் செயல் திறன் குறைந்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து இதய மாற்று சிகிச்சை மட்டுமே ஒரே தீா்வு என்ற நிலையில், அவா் உறுப்பு தானத்துக்காகக் காத்திருந்தாா். கடந்த ஜனவரியில் தில்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயது நபரின் இதயம் தானமாக கிடைக்கப் பெற்றது. உடனடியாக அதை சென்னைக்கு கொண்டு வந்து ஆயிஷாவுக்கு பொருத்தினோம். அதன் தொடா்ச்சியாக, படிப்படியாக குணமடைந்த அந்தப் பெண் கடந்த வாரம் வீடு திரும்பினாா் என்றனா்.