ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் உள்பட 12 இடங்களில் என்ஐஏ அதிரடி ரெய்டு..!

 ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பூஞ்ச் மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் அதிக இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது.

கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியான பிம்பர் காலி என்ற இடத்தில் இருந்து சங்கியோடி என்ற இடத்துக்கு ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 6 ராணுவ வீரர்களை குறிவைத்து அப்பகுதியில் மறைந்திருந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கடந்த 20-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராக்கெட் மூலம் வீசக்கூடிய எரிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

இந்த தாக்குதலை லஷ்கர் இ தொய்பா எனும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் 40-க்கும் மேற்பட்டோரை பிடித்துள்ள பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று அங்கு என்ஐஏ சோதனை நடைபெறுகிறது.