கோவையில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் கோவிலை இடித்து அகற்றிய பேரூராட்சி நிர்வாகம் – பக்தர்கள் அதிர்ச்சி..!

கோவை அடுத்த இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்ட  வெற்றி வேலா நகர் மற்றும் ராகவேந்திரா கார்டன் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் வழிபட வசதியாக அந்த பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் கடந்த ஆண்டு விநாயகர் கோவில் கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்ட இந்த விநாயகர் கோவில்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.   மேலும் ரிசர்வ் சைட்டில் விநாயகர் கோவில் கட்டப்பட்டதற்கு  தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அந்த பகுதி பொதுமக்கள் இடிகரை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இடிகரை பேரூராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் வெற்றி வேலா நகர் மற்றும் ராகவேந்திரா கார்டனில் கட்டப்பட்டு இருந்த 2 விநாயகர் கோவில்களை இடித்து அகற்றினர். இதனால் பக்தர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அங்கு இடிக்கப்பட்ட விநாயகர் சிலையை எடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது வயிற்றுப் பகுதியில் வைத்துக் கொண்டு இடிந்த கட்டிடத்தின் மீது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.