மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்து பலியான 134 உயிர்களுக்காக குஜராத்தில் நாளை துக்க நாள் அனுசரிப்பு..

மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் குஜராத் மாநிலம் முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 134 பேர் உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் நாளை (நவம்பர் 2) துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள மோர்பி தொங்கும் பாலம் விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் மோடி இன்று நேரில் சந்திக்க உள்ளார். பிரதமர் வருகையையொட்டி மோர்பி சிவில் மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மோர்பி பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பூபேந்திர படேல் தலைமையிலான குஜராத் அரசு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 2) மாநிலம் தழுவிய துக்கம் அறிவித்துள்ளது. இந்த பெரும் சோகத்திற்கு பிந்தைய நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், நவம்பர் 2-ஆம் தேதி மாநிலம் முழுவதும் துக்கம் அனுசரிக்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய கொடி மாநிலத்தில் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி எதுவும் நடத்தப்படாது என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.