ட்விட்டர் சி.இ. ஓ உள்பட அனைத்து உறுப்பினர்களும் கூண்டோடு நீக்கம் : ஒற்றை இயக்குநராக தன்னையே அறிவித்தார் எலான் மஸ்க்..!

ட்விட்டர் நிறுவனத்தை நீண்ட இழுபறிக்குப் பின்னர் வாங்கிய எலான் மஸ்க் ட்விட்டரின் ஒற்றை இயக்குநராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார்.

நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் முழுமூச்சாக செயல்பட்டுவருபவர். இந்நிலையில் அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதப் பங்குகளை விலைக்கு வாங்கினார். அதையெடுத்து அவர் ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதில் இடம் பெற மறுத்தார்.ஆனால், அடுத்த சில நாட்களிலே அவர் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக வாங்க விரும்புவதாக அறிவித்தார். ஒரு பங்குக்கு 54.20 டாலர் விலை என்ற வீதத்தில் மொத்தமாக 44 பில்லியன் டாலர் தருவதாக அவர் கூறினார்.

ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ட்விட்டர் இயக்குநர் குழு நிறுவனத்தை எலான் மஸ்குக்கு விற்க ஒப்புதல் தெரிவித்தது. இதற்கான பரிவர்த்தனை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று கூறப்பட்டது. இந்தச் சூழலில், ட்விட்டர் நிறுவனம் சில தகவல்களை இன்னும் வழங்கவில்லை என்று கூறி இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக முடிவெடுக்க எலான் மஸ்குக்குக் அமெரிக்க நீதிமன்றம் கெடுவிதித்தது.

இந்நிலையில், எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) ட்விட்டரை முழுமையாக வாங்கினார். மேலும், ட்விட்டரின் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பொறுப்பிலிருந்து நீக்கினார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை நீண்ட இழுபறிக்குப் பின்னர் வாங்கிய எலான் மஸ்க் தன்னையே ட்விட்டரின் ஒற்றை இயக்குநராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டுள்ளார். இதற்கு முன்னாள் ட்விட்டர் வாரியத்தில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.