இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் கரன்சி இன்று வெளியீடு-ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

மும்பை: இந்தியாவில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மெய்நிகர் நாணயமான கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கிரிப்டோக்களின் மதிப்பு ஜெட் வேகத்தில் எகிறுவதால் இதில் முதலீடு செய்ய இளம் தலைமுறையினர் பலர் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், பொய்யான கிரிப்டோ கரன்சி உருவாக்கம், அதிக லாபம் தரும் முதலீடு என்று கூறி வெளியாகும் பொய்யான விளம்பரங்கள், பணம் பதுக்கல், கருப்பு பணத்தை வெள்ளையாக்க கிரிப்டோ கரன்சி முதலீட்டை பயன்படுத்துவது என்று கிரிப்டோ கரன்சி உலகத்திற்கு இன்னொரு மோசமான பக்கமும் உள்ளது.

இதன் காரணமாகவே கிரிப்டோ கரன்சி பயன்பாட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி மூலமாக இந்தியாவில் டிஜிட்டல் நாணயம் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, டிஜிட்டல் நாணயத்தை வெளியிடுவதற்கான பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வந்தது. முதலில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ரபி சங்கர் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், சோதனை அடிப்படையில் நாடு முழுவதும் இன்று டிஜிட்டல் நாணயத்தை அறிமுகம் செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கொடக் மகேந்திரா, எஸ் பேங்க், ஐடிஎப்சி, எச்எஸ்பிசி ஆகிய 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதல்கட்டமாக இந்த டிஜிட்டல் நாணயங்களை மொத்த பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, அரசு வெளியிடும் பத்திரங்களை டிஜிட்டல் நாணயங்களை கொண்டு வாங்க முடியும்.

இந்த டிஜிட்டல் நாணயம் ஒரு மாதத்திற்கு பின் குறிப்பிட்ட பகுதிகளில் முழுமையாக வாடிக்கையாளர்கள், வர்த்தகர்களை உள்ளடக்கிய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறுகையில், ”தற்போது புழக்கத்தில் உள்ள பணத்திற்கு, டிஜிட்டல் நாணயம் கூடுதல் விருப்பத்தேர்வாக இருக்கும். டிஜிட்டல் நாணயங்கள் பண பரிமாற்றத்திற்கு எளிதாகவும், வேகமாகவும் இருக்கும். தற்போது ரூபாய் நோட்டுகளாக வங்கியில் இருப்பு வைத்திருப்பதைப்போல இந்த டிஜிட்டல் நாணயங்களை வங்கியில் இருப்பு வைத்துக்கொள்ளலாம்” என்றனர்.

* டிஜிட்டல் நாணயங்கள் வழக்கமான ரூபாய் நோட்டுகளிலிருந்து வேறுபட்டதல்ல. அவை டிஜிட்டல் வடிவில் மட்டுமே இருக்கும்.
* ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, இந்தியாவில் வெளியிடப்படும் டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பு, மற்ற கிரிப்டோ கரன்சிகளைப் போல காலப்போக்கில் அதிரடியாக மதிப்பு குறையவோ கூடவோ செய்யாது.
* டிஜிட்டல் நாணயத்தை வெளியிடுவதன் மூலம், சொந்தமாக டிஜிட்டல் நாணயம் கொண்டுள்ள சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும்.