ஆருத்ராவில் இருந்து அமைச்சர்களுக்கு போன பணம்.. DMK files 2 ரெடி.. அண்ணாமலையின் அடுத்த மூவ்.!!

சென்னை : ஆருத்ரா மோசடியில் பாஜகவின் முக்கிய புள்ளிகள் பலர் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், ஆருத்ரா மோசடி பணம் எந்த தமிழக அமைச்சருக்கு சென்றது என DMK files 2ஆம் பாகத்தில் வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக பொதுமக்களை ஏமாற்றிவிட்டு கம்பி நீட்டியது. இந்த நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி ஆயிரக்கணக்கானோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்து பணத்தைப் பறிகொடுத்தனர்.

ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்ட ஹரீஷ் என்பவர் பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்துள்ளார். மாநில பொறுப்பு வாங்க ஆரூத்ரா கோல்டு நிறுவனத்தில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை பாஜக நிர்வாகிகளுக்கு ஹரீஷ் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், ஆருத்ரா மோசடியில் பாஜகவை சேர்ந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்பு கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதனால், மேலும் பல பாஜக புள்ளிகள் ஆருத்ரா மோசடியில் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் நிலவுகிறது. ஆருத்ரா கோல்டு மோசடியில் ரூ.84 கோடியை அண்ணாமலை நேரடியாக பெற்றுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜூலை முதல் வாரம் DMK files 2 வெளியிடப்படும் என்றும், ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் இருந்து திமுகவில் எந்த அமைச்சர் எவ்வளவு பணம் பெற்றார் என்பதை dmk files 2 வில் வெளியிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜக பிரமுகர்கள் பலர் சிக்குவார்கள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றதாக அண்ணாமலை கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.