மோச்சா புயல் அதிதீவிரம்.. துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டுகளுக்கு அர்த்தம் தெரியுமா..?

சென்னை: மோச்சா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதால் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

எண்ணூர், பாம்பன், தூத்துக்குடி, நாகை,காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுவடைந்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத்துறை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலோரப் பகுதியில் மோச்சா புயல் உருவாகியுள்ளது என்றும் அது 11-5- 2023 அன்று வடமேற்கு பகுதியில் நகர்ந்து 14-5- 2023 அன்று பங்களாதேஷ் கடற்கரை அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே அந்நாட்களில் நாட்டு படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நாட்டுப்பாட கு மீனவர்கள் யாரும் ஆள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என ராமேஸ்வரம் உதவி இயக்குனர் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

மோச்சா புயல் மிக தீவிர புயலாக மாறியுள்ளது. நாளை மறுநாள் 14 ஆம் தேதி தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை புயல் கடக்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது கடுமையான புயலாகவும், காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும், இடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் கூட காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள். இந்த எச்சரிக்கைச் சின்னங்கள் ஒன்றில் துவங்கி 11 வரை உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் புயல் எச்சரிக்கை சின்னங்களுக்காக விளக்கங்களை பார்க்கலாம்.

ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும். 3ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும்.

ஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதை குறிக்கிறது. அதோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். ஆறாம் எண் புயல் கூண்டு ஏற்றினால் புயல் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிப்பதாகும்.

ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.

ஒன்பதாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். 10ஆம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது. துறைமுகத்தில் கடைசியாக ஏற்றப்படும் 11ஆம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது. இது எதற்கு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.