மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காற்றிலிருந்து குடிநீர் தயாரிப்பு-அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

காற்றிலிருந்து குடிநீர் தயாரிப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களின் வசதிக்காகக் கோயில்களில் பல்வேறு வசதிகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், சுகாதாரமான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் பக்தர்களுக்குக் கட்டாயம் எனத் தெரிவித்த அவர், கோயில் ஊழியர்கள் பக்தர்களிடம் கனிவாக நடந்துகொள்வதும் அவசியம் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முன்மாதிரியாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், ஒரு நாளைக்கு 500 லிட்டர் சுகாதாரமான குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும் தெரிவித்தார்.

அடுத்ததாக காளிகாம்பாள் கோயிலில் இயந்திரம் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவித்த அவர், முயற்சி வெற்றி தந்தால், படிப்படியாகப் பிற கோயில்களிலும் இந்த இயந்திரம் நிறுவப்படும் எனவும், சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் அரசு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் நோட்டீஸூக்கு விளக்கமளிக்க ஆகஸ்ட் மாதம் 2-வது வாரம் வரை நடராஜர் கோயில் நிர்வாகம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், அரசும் அவகாசம் தந்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அவர்கள் தரும் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.