தமிழக சட்டமன்ற தேர்தலின் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றம் 234 தொகுதிகளைக் கொண்டது. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 4ம் தேதி எண்ணப்பட உள்ளது. இப்படியான நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் என்.டி.டி.வி பீப்பிள்ஸ் பல்ஸ், ரிபப்ளிக் – பி மார்க், மேட்ரிஸ், சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ், அக்னி, டைம்ஸ் நவ், வோட் வைப், பீப்பிள்ஸ் இன்சைட், ஆக்ஸிஸ் மை உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக வரும் என சொல்லப்பட்டுள்ளது. மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படும் தமிழக வெற்றிக் கழகம் இரட்டை இலக்கத்தில் தொகுதியைப் பெறும் என்பது அனைத்து கருத்து கணிப்பு முடிவுகளிலும் தெரிய வந்துள்ளது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்திருக்கிறது.
இதனிடையே கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி, கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “எத்தனை தேர்தல்கள் நடந்தாலும் பாஜக நுழையவே முடியாத எஃகு கோட்டையாக தமிழ்நாடும்,கேரளமும் இருக்கும்.அதற்கு இந்தத் தேர்தலும் விதிவிலக்கல்ல” என தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் உண்மையான கருத்துக் கணிப்புகள் அல்ல. மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள உண்மையான கருத்துக் கணிப்புகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.அதனால் இதைப்பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை” என கூறியுள்ளார்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான இன்பதுரை கூறுகையில், நாங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்புவதில்லை, ஏனெனில் அவை உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை. அவை குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் வாக்காளர்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிக்கத் தவறுகின்றன.
கடந்த கால நிகழ்வுகளைப் பார்த்தால், 2011ல் அதிமுகவுக்கு ஒரு சிறிய பெரும்பான்மை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் நாங்கள் 203 இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றோம். 2016-லும் கூட, சில நிறுவனங்கள் திமுக முன்னிலை வகிக்கும் என்று கணித்தன, ஆனால் முடிவு வேறுவிதமாக இருந்தது, அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இந்தக் கருத்துக் கணிப்புகள் குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டவை, மேலும் அவை வாக்காளர்களின் முழுமையான மனநிலையைப் பிரதிபலிப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.









