நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றார் மாவோயிஸ்டு தலைவர்கள்- களத்தில் குதித்த இந்தியா, சீனா..!

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகளின் மாஜி தலைவர் பிரசண்டா பதவியேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேபாளத்தை தங்களது ஆதரவு நாடாக தக்க வைப்பதில் இந்தியா, சீனா இருநாடுகளும் களத்தில் குதித்துள்ளன.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விரைவில் காத்மாண்டு செல்ல இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலைமை இருந்தது. இதனால் புதிய பிரதமர் யார் என்பதில் குழப்பம் தொடர்ந்தது. இந்த நிலையில் அதிரடி திருப்பமாக மாஜி மாவோயிஸ்டுகளின் தலைவர்களாகிய பிரசண்டாவும் கேபி ஓலியும் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளனர். நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

பிரசண்டா, கேபி ஒலி என்கிற ஓலி இருவருமே இந்திய எதிர்ப்பாளர்கள்; சீனாவின் ஆதரவாளர்கள். இதனால் நேபாளம் தொடர்பான விவகாரங்களில் சீனாவின் கை ஓங்கி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் நேபாளம், இந்தியாவைத்தான் சார்ந்து பல விவகாரங்களில் இருந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

2008-ம் ஆண்டு நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா பதவியேற்ற உடனேயே சீனாவுக்குதான் முதலில் நட்புக்கரம் நீட்டினார். ஆனால் அவருக்கு முந்தைய நேபாள பிரதமர்கள் அனைவருமே இந்தியாவுக்குதான் முன்னுரிமை கொடுத்தனர்; பதவியேற்றதும் இந்தியாவுக்குதான் முதன் முதலாக வருகையும் தந்தனர். பின்னர் 2016-ல் மீண்டும் பிரதமராக பிரசண்டா பதவி ஏற்ற போது இந்தியாவுக்கே முன்னுரிமை தந்தார். 2-வது முறையாக பிரதமரான உடன் இந்தியாவுக்கு வருகை தந்தார் பிரசண்டா.

தற்போது 3-வது முறையாக பிரதமராகி இருக்கிறார் பிரசண்டா. அவருடன் இப்போது கை கோர்த்துள்ள கேபி ஓலி, சீனாவின் ஆதரவில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இருந்தபோதும் நமது வெளியுறவுத்துறை இப்போதே நேபாளம் தொடர்பான வியூகங்களில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசண்டா பதவியேற்ற உடன் அவருக்கு முதன் முதலில் வாழ்த்து தெரிவித்தது பிரதமர் நரேந்திர மோடிதான். இந்தியாவைத் தொடர்ந்தே பிற நாடுகள் பிரசண்டாவுக்கு வாழ்த்து தெரிவித்தன.

பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், நேபாள பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காம்ரேட் பிரசந்தாவிற்கு (பிரசண்டா) நல்வாழ்த்துகள். ஆழ்ந்த கலாச்சார மற்றும் மக்கள் இடையேயான இணைப்பின் அடிப்படையில் இந்தியா, நேபாளம் இடையேயான தனித்துவம் வாய்ந்த உறவு அமைந்துள்ளது. இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்ற மிகுந்த ஆவலோடு இருக்கிறேன் என கூறியிருந்தார்.

நேபாளத்தின் பொருளாதாரத்தை மீள கட்டமைக்க உதவுவதாக இந்திய தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதன் அடுத்த கட்டமாக இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் காத்மாண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்திய அதிகாரிகளின் பயணத்துக்குப் பின்னர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் காத்மாண்டு செல்வார் என்கின்றன டெல்லி தகவல்கள். இதே பாணியில் சீனாவும் களமிறங்கி இருக்கிறது. சீனாவும் நேபாளத்தை தனது பிடியில் வைத்துக் கொள்ள பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.