கோவை அருகே உள்ள இருகூர் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் அந்த பகுதியில் நூற்பாலைகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள் தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் ராஜசேகரனுக்கும் இடையே பணத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது .இந்த நிலையில் நேற்று காலை திடீரென்று எதிர்தரப்பினர் 15 பேர் ராஜசேகரனின் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த வேலையாட்களை வெளியே அனுப்பி விட்டு தொழிற்சாலையை இழுத்து பூ ட்டினார்கள் . இந்தசம்பவம் பற்றி தகவல் அறிந்த ராஜசேகரன் சிங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்பகுதியில் ராஜசேகரன் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூட்டிய தொழிற்சாலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு கால தாமதமானதால் போலீஸ் வாகனம் முன் படுத்து மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் போலீசாரின் சமரசத்தை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டு, பூட்டிய தொழிற்சாலை திறக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்..