உக்ரைன் மீதான போருக்கு பின்பு உலக நாடுகளில் இருந்து தனித்துவிடப்பட்ட நிலையில் இருக்கும் ரஷ்யாவுக்குத் தனது வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை விரிவாக்கம் செய்யச் சிறிய அளவிலான வாய்ப்புகள் மட்டுமே இருக்கும் நிலையில், எதைச் செய்தாலும் வேகமாகவும், பெரியதாகச் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது.
இதன் வாயிலாக ரஷ்யா-வின் தற்போது முக்கிய வர்த்தகக் கூட்டணி நாடுகளாக இருப்பது சீனா, இந்தியா, ஈரான், வளைகுடா நாடுகள் மற்றும் இதர சிறு மற்றும் நடுத்தரச் சோவியத் நாடுகள் தான்.
இதிலும் குறிப்பாக இரு தரப்பும் அதிகப்படியான லாபத்தையும், வர்த்தகத்தையும் அடைய கூடிய வகையில் ரஷ்யாவுக்கு இருக்கும் ஓரே வர்த்தகச் சந்தை இந்தியா என்பதால் பிரம்மாண்ட திட்டத்தை உருவாக்கி வருகிறது ரஷ்யா.
ரஷ்யா கடந்த 10 வருடத்தில் ஐரோப்பா மத்தியில் கட்டமைக்கப்பட்ட கனெக்டிவிட்டி, கேபிட்டல் மார்கெட்ஸ், பைனான்சியல் இன்பராஸ்டக்சர் ஆகியவற்றைத் தற்போது இந்தியா உடன் அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரஷ்யா – இந்தியா மத்தியிலான வர்த்தகம் 120-150 பில்லியன் டாலர் வரையில் உயரும் என ரஷ்யா-வின் அலுமினிய தொழிலதிபரான Oleg Deripaska தெரிவித்துள்ளார்.
பல வருடங்களாக ரஷ்யா தனது பொருளாதாரத்தை ஐரோப்பிய சந்தையை நம்பி தான் கட்டமைத்து வந்தது. இதனால் தற்போது ரஷ்யா – ஐரோப்பியா மத்தியிலான வர்த்தகம் 750 பில்லியன் முதல் 1 டிரில்லியன் டாலராக உள்ளது என Oleg Deripaska தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது உக்ரைன் மீதான போரின் காரணமாக அறிவித்த தடையால் இரு தரப்பு வர்த்தகமும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
சுமார் 12 வருடமாக ரஷ்யா – ஐரோப்பா இணைந்து பொதுப் போக்குவரத்து, நிதியியல் மற்றும் கடன் கட்டமைப்பு, நிலையான வர்த்தக நடைமுறைகளை உருவாக்கி இரு நாடு நாடுகள் மத்தியிலான வர்த்தகம் 1 டிரில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
தற்போது இதேபோன்ற கட்டமைப்பை ரஷ்யா இந்தியா உடன் இணைக்கத் திட்டமிட்டு வருகிறது. மேலும் Oleg Deripaska ரஷ்யா அதிபர் விளாடிமீர் புதின் உடன் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வர்த்தகப் பற்றாக்குறைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கச்சா எண்ணெய், எரிவாயு, தங்கம், வைரம் ஆகிய அனைத்தையும் ரஷ்யாவிடம் இருக்கும் நிலையில் புதிய வர்த்தகத்திற்காகப் போராடும் ரஷ்யா விடம் இருந்து தள்ளுபடி விலையில் வாங்க முடியும். இதேபோல் இந்தியாவிடம் இருந்து உணவு பொருட்கள், பார்மா, ஆடை எனப் பல பொருட்களை ரஷ்யாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும்.
மார்ச் 2021 உடன் முடிந்த நிதியாண்டில் இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் 8.1 பில்லியன் டாலராக உள்ளது, ஆனால் ரஷ்ய அரசு தரவுகள் படி இதன் அளவு 9.31 பில்லியன் டாலராக உள்ளது. இந்த அளவீட்டைத் தான் 120 முதல் 150 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது ரஷ்யா.
இதற்கு ஏற்றார் போல் ஆர்பிஐ ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி-க்கு இந்திய ரூபாய் வாயிலாகப் பணத்தைச் செலுத்தும் புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இது ரஷ்யா – இந்தியா மத்தியிலான வர்த்தகத்தில் டாலர் தேவையைப் பெரிய அளவில் குறைக்க உதவும் முக்கியமான கருவியாக உள்ளது.