மின் கட்டண உயர்வை கைவிட கோரி குறு, சிறு நிறுவனங்கள் வரும் 20-ம் தேதி கதவடைப்பு – ‘டான்சியா’ முடிவு..!

கோவை: மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி குறு, சிறு நிறுவனங்கள் கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ‘டான்சியா’ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கம் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ‘டான்சியா’ செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மின் வெட்டால் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு, மின் கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.

உச்ச நேர மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களை அடைத்தும், மாவட்ட தலைநகரங்களில் தொழில்முனைவோர் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சினைகளால் தொழில்முனைவோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டண உயர்வு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை, இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் நிறுவன தலைவர் ரகுநாதன் கூறும்போது, ‘மின் கட்டண உயர்வு பிரச்சினைக்கு தொடக்கத்திலேயே தீர்வு கண்டிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தொழில்முனைவோரின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவும், கோரிக்கைகளை கேட்கவும் மறுக்கின்றனர்’ என்றார்..