கல் குவாரியால் பள்ளி, வீடுகளில் விரிசல்… அச்சத்தில் மக்கள்… பொக்லைன் இயந்திரங்களை சிறை பிடித்து போராட்டம்..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்காரிபாளையம் மற்றும் ஓலப்பாளையம் கிராமங்களில்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் கல்குவாரியில் செயல்பட்டு வருகிறது. கருமத்தம்பட்டி பகுதியில் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு கல்குவாரி சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த கல்குவாரியில் பாறைகளை தகர்க்க அதிக சக்தி வாய்ந்த வெடிகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த வெடிகள் வெடிப்பதால் குவாரிக்கு அருகே உள்ள வீடுகள் மற்றும் விவசாய தோட்ட கட்டடங்களில் மேற்கூரைகள் சேதம் அடைவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி பாறைகளை வெடிப்பதால் ஓலப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கல்குவாரியில் இருந்து அதிக சக்தி வாய்ந்த வெடி வெடித்ததால் சிதறிவிடும் கருங்கற்கள் அலங்காரி பாளையம் மாகாளியம்மன் கோவில் மீது விழுந்ததால் கோவில் சுவரில் கான்கிரீட் பெயர்ந்து துளை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அலங்காரி பாளையம் மற்றும் வரப்பாளையம் கிராமங்களில் வசிக்கும் மக்கள் எந்த நேரத்தில் கல்குவாரியில் இருந்து சிதறி வரும் கருங்கற்கள் வீட்டின் மீது விழுமோ என அஞ்சியபடி வாழ்ந்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியே சென்று நடமாடவும் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் அன்றாடம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லும் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வரப்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை தனியார் கல்குவாரியில் பாறைகளை தகர்க்க அதிக சத்தத்துடன் வெடி வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குவாரியில் இருந்த பொக்லைன்  இயந்திரங்களை சிறை பிடித்து தனியார் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் குவாரியில் அதிக சத்தத்துடன் வெடி வைப்பதால் வீடுகள் சேதம் அடைவதோடு நிம்மதியாக குடியிருக்க முடிவதில்லை எனவே தனியார் குவாரியை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை பணியாளர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.