கொரோனாவால் உயிரிழந்த 5 பேருக்கும் இணை நோய் இருந்தது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!

மிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த 5 பேர் இணை நோய் உள்ளவர்கள் என்றும், தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்தாலும், அது கிளஸ்டர் இல்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் குறித்து மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.11) பூஜ்ய நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் தினசரி 400 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு தனி வார்டு அமைக்க வேண்டும்- மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

சிறப்பு கவனத் தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் வட்டார, மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 11 ஆயிரத்து 333 மருத்துவமனைகளில் அனைத்து பணியாளர்களும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என முதற்கட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாவது அலையின்போது 230 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு இருந்தது, ஆனால் தற்போது 2 ஆயிரத்து 67 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இருப்பு உள்ளது. 64 ஆயிரத்து 281 படுக்கை வசதிகள் தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் 1 லட்சத்து 48 ஆயிரம் படுக்கைகள் 24 மணிநேரத்தில் ஏற்பாடு செய்ய முடியும், 3 லட்சம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய முடியும். உயிர் பறிக்கும் அளவுக்கு பாதிப்பு இல்லை, தொண்டை வலி, இருமல் போன்ற பதிப்புகளே இருக்கிறது. அதி தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. அதிக பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே 4வது அலையாக மாறும்.

திருப்பூரில் 82 வயது முதியவர் இறந்துள்ளார், அவருக்கு நீண்ட நாட்களாகவே சர்க்கரை நோய் இருந்துள்ளது. தூத்துக்குடியில் 54 வயதான ஒருவர் இறந்துள்ளார், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்துள்ளது. திருப்பூர் அனுப்பன்பாளையம் சேர்ந்த 60 வயது முதியவர் ரத்தக்கொதிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர், அவரும் உயிரிழந்துள்ளார். திருப்பூர், தூத்துக்குடி, கோவையில் இணைநோய் பாதிப்பு இருந்தவர்கள் மட்டுமே கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 55 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று நிவாரண உதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஐந்து, பத்து என்ற எண்ணிக்கையிலேயே தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கிளஸ்டர் என்று கூற முடியாது. இந்த எண்ணிக்கை பெருகும் பட்சத்தில், பொது இடங்களில் பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக கொண்டு வரலாம். இணைநோய் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.