அழகர்மலையை சென்றடைந்தார் கள்ளழகர்- 21 பூசணிக்காய் சுற்றி திருஷ்டிக்கழிப்பு.!!

துரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய கள்ளழகர் நேற்று காலையில் அழகர்மலையிலுள்ள கோயிலை சென்றடைந்தார்.

கோயிலுக்குள் நுழைந்த கள்ளழகருக்கு 21 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டிக் கழித்தனர்.

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி திருவீதி உலாவுடன் தொடங்கியது. மே 3-ல் அழகர்மலையிலிருந்து கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்பட்டார். மதுரைக்கு புறப்படும்போதே மழை பெய்யத் தொடங்கியது. மே 4-ல் மதுரை மாநகர எல்லை மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது.

மே 5ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் மாலையை சூடிக்கொண்டு கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று 100 ஆண்டுக்குப்பின் புனரமைக்கப்பட்ட ஆயிரம் பொன் சப்பரத்தேரில் எழுந்தருளினார். அன்று அதிகாலை சாரல் மழையுடன் 5.52 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றுப்பகுதியில் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்தனர். இதில் பச்சை பட்டு உடுத்தி இறங்கியதால் நல்ல மழைப்பொழிவால் விளைச்சல் உண்டாகி நாடு செழிக்கும் என்பது நம்பிக்கை.

பின்னர் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார். மே 6-ல் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் விடிய, விடிய தசாவதாரம் முடிந்து மோகினி அவதாரத்தில் மதியம் 2 மணி வரை அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழித்திருந்து தரிசனம் செய்தனர்.

பின்னர் கருப்பணசாமி கோயில் முன் வையாழியாகி தல்லாகுளம் பெருமாள் கோயில் சென்றார். இதன்பின் முன்னர் எழுந்தருளிய மண்டகப்படிகளில் மீண்டும் எழுந்தருளி லட்சோப லட்சம் மக்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு மூன்றுமாவடியிலிருந்து புறப்பட்டபோது மழையோடு மதுரைக்கு வந்தவர் மழையோடு புறப்பட்டதால் பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். பின் கடச்சனேந்தல் வழியாக சுந்தரராஜன்பட்டியில் தங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் அங்கிருந்து புறப்பாடாகி அப்பன்திருப்பதி, கள்ளந்திரி, பொய்கைக்கரைப்பட்டி வழியாக சென்றபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தார்.

கோட்டை சுவர் வழியாக நுழைந்த கள்ளழகருக்கு திரண்டிருந்த பக்தர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் கருப்பணசாமி கோயில் முன்பு தீபாராதனை நடைபெற்றது. பின்பு பெரியவாச்சான் நுழைவாயில் வழியாக காலை 10.30 மணியளவில் கோயில் வளாகத்திற்குள் நுழைந்த கள்ளழகருக்கு கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி மற்றும் பக்தர்கள் 250 கிலோ வண்ண மலர்கள் தூவி வரவேற்றனர். இதில் 21 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டி கழித்தனர். பின்னர் 11 மணியளவில் கோயிலுக்குள் அர்த்த மண்டபத்தை அடைந்தார். நாளை (மே 10) உற்சவ சாற்றுமுறை முடிந்து இருப்பிடம் சேர்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் மு.ராமசாமி, தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்..