காரமடை அரங்கநாதசாமி கோவில் தேரோட்டம்: 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் மாசி மகதிருத்தேர் திருவிழாவானது வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவாலின் காரணமாக பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த ஆண்டு மாசிமக திருத்தேர் திருவிழா வருகிற 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனையொட்டி எம்பெருமான் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். மார்ச் மாதம் 4 -ந் தேதி ஸ்ரீ பெட்டத்தம்மன் அழைப்பு , 5-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.விழாவின் முக்கிய நிகழ்வான மாசிமக திருத்தேரோட்டம் மார்ச் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர் திருவிழா நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் காரமடை அரங்கநாதர் கோவில் வளாகத்தில் சுதர்சன பட்டர் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, செயல் அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்ட தலைவர் சிவப்புகழ் பங்கேற்று பேசுகையில் தேர்வடம் பிடித்து இழுக்கும் இடத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சொர்க்கவாசல் வீதி,கோவிலின் முன்புறமுள்ள வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். அதேபோல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆலோசனை கூட்டத்தில் காரமடை நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், இந்து முன்னணியின் நிர்வாகிகள், பாரதீய ஜனதா நகர தலைவர் விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.