மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் கோவை அரசு மருத்துவமனைக்கு 2 வது இடம்..!

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதய சிகிச்சை பிரிவு, எலும்பு மூட்டு சிகிச்சை பிரிவு, சிறுநீரக பிரிவு உள்பட ஏராளமான துறைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகளை கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் புள்ளிகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மாநில அளவில் 2-ம் இடம் பிடித்தது.

இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறியதாவது:

அரசு ஆஸ்பத்திரிகளின் ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகளுக்கும் தனித் தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதனை தொகுத்து மொத்தமாக புள்ளிகள் வழங்கப்பட்டு மாநில அடிப்படையில் ரேங்க் வழங்கப்படுகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதத்திற்கான தரவரிசை பட்டியலில் கோவை அரசு ஆஸ்பத்திரி 265.8 புள்ளிகளுடன் 2-ம் இடத்தை பிடித்தது. கடந்த டிசம்பர் மாதம் 3-ம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு ஆஸ் பத்திரியில் 163 குழந்தைகளுக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 31 குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 3 குழந்தைகளுக்கு கோவையிலும், 28 குழந்தைகளுக்கு சென்னையிலும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்