ஆபாச நடிகையுடன் நெருக்கம்.. பிரசார நிதி செலவு.. மார்ச் 21ல் டொனால்ட் ட்ரம்ப் கைது? அமெரிக்காவில் பரபரப்பு..!

வாஷிங்டன்: ஆபாச நடிகையுடன் நெருக்கமாக இருந்ததாகவும், பிரசார நிதியை செலவு செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21ல் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனை டொனால்ட் ட்ரம்பே தனது வலைதளத்தில் கூறிய நிலையில் ஆதரவாளர்களை போராடும்படி தெரிவித்துள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். குடியரசு கட்சியை சேர்ந்த இவர் 2016 முதல் 2021 வரை அமெரிக்க அதிபராக இருந்தார். இதையடுத்து 2020 இறுதியில் நடந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார்.

டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் தான் டொனால்ட் ட்ரம்ப் தற்போது புதிய சிக்கலை சந்திக்க தொடங்கி உள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடந்த 2016 அதிபர் தேர்தலுக்கு முன்பாக டொனால்ட் ட்ரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல் என்பவருடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் பரவியது. இதனை டொனால்ட் ட்ரம்ப் மறுத்தார். மேலும் தேர்தலில் தன்னை தோற்கடிக்கும் வகையில் இந்த தகவல் பரப்பி விடப்படுவதாக அவர் கூறினார்.

மேலும் சம்பவம் குறித்து வெளியில் பேசாமல் இருக்க டொனால்ட் ட்ரம்ப் பிரசார நிதியில் இருந்து பெருமளவு பணம் கொடுத்ததாக கூறப்பட்டது. இது அப்போது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தான் டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன் வழக்கில் அவருக்கு எதிராக திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.

ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியலுக்கு, மைக்கேல் கோஹன் மூலம் பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தான் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் தான் வரும் 21ம் தேதி தான் கைது செய்யப்பட உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் வலைதள பக்கத்தில், ”குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான முதன்மை நபரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21ல் கைது செய்யப்பட உள்ளார். ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க தயாராக வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஒரு வேளை இவ்வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டால், குற்ற வழக்கில் கைதாகும் முதல் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை சமூகவலைதளங்கள் மூலம் போராட்டத்துக்கு தூண்டினார். அவர்கள் அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவற்றில் அவர் செயல்பட தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகள் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆதரவாளர்களை போராடும்படி ட்ரூத் வலைதளத்தில் கூறியுள்ளார்.