அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடும்பன் கோயிலில், 142 கிராம் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் ஆகியவை மர்மமான முறையில் மாயமாகி இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இடும்பன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இக்கோயிலுக்குச் சமீபத்தில் புதிய செயல் அலுவலராக நரசின்னம் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் முறைப்படி கோயிலின் சொத்துக்கள், நகைகள் மற்றும் காணிக்கை விபரங்கள் அடங்கிய பதிவேடுகளைக் கொண்டு நேரடி தணிக்கை மற்றும் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, கோயில் பாதுகாப்பு அறையில் இருக்க வேண்டிய முக்கிய நகைகள் மாயமாகி இருப்பது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.புதிய செயல் அலுவலரின் இந்த சோதனையில், இடும்பன் சாமிக்குச் சாத்தப்படும் 142 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் ஆகியவை பெட்டகத்தில் இல்லை என்பது முதற்கட்டமாக அம்பலமானது. இதுமட்டுமன்றி, கோயிலின் பொது இருப்பில் வைத்திருக்க வேண்டிய மற்றும் சில முக்கிய நகைகளும் கணக்கில் வராமல் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, செயல் அலுவலர் நரசின்னம் உடனடியாக இந்த மோசடி குறித்துத் தனது உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து, பழனி நகர காவல் நிலையத்தில் இடும்பன் கோயில் நகைகள் திருட்டு போனது குறித்து முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், கோயில் ஊழியர்கள் மற்றும் பழைய நிர்வாகத்தினரிடம் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.பழனியில் பக்தர்களின் காணிக்கைச் சொத்துக்கள் திருடப்பட்டுள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இதுபோன்ற தொடர் முறைகேடுகள் நடப்பது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், போலீசார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
பழனி இடும்பன் கோயிலில் தங்கம், வெள்ளி மாயம்









