திருவாரூரில் ஓர் அதிசயக் கோயில்… சீதளாதேவி அம்மன் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!

திருவாரூர் பெரிய கோயில் என்று சொல்லப்படும் தியாகராஜர் கோயிலின் கமலாம்பாள் ஆலயத்தை மையமாகக் கொண்டு எட்டு அம்மன் ஆலயம் எட்டுத் திசைகளிலும் உள்ளன.

அந்த ஆலயங்கள் அஷ்ட திசையிலும் ஆட்சி செய்யும் அஷ்ட தேவிகளைக் குறிக்கின்றன. அதில் லட்சுமி ஸ்தானத்தில் இருந்து அருள்பாலிக்கின்ற தேவி தான் சீதளாதேவி.

காகிதகாரத் தெரு மாரியம்மன் கோயில் எனச் சொல்லப்படும் சீதளாதேவி அம்மன் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் வடக்கு வீதித் திருப்பத்தில் இருக்கும் நுழைவாயில் உள்ளே அமைந்திருக்கிறது.

இந்தக் கோயில் சுமார் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பிருந்தே உள்ள கோயிலாகக் கூறப்படுகிறது. ‘மாரியம்மன்’ என்றும் அழைக்கப்படுகிறாள் இந்த அம்மன். ‘மாரி ‘என்றால் ‘மழை’ என்று பொருள். ‘சீதளம்’ என்றால் ‘குளிர்ச்சி’ என்று பொருள். ஆக, மனதில் உள்ள கவலைகளை நீக்கிக் குளிர்ச்சியைத் தரக்கூடியவள் சீதளாதேவி அம்மன். இங்கே அஷ்ட லக்ஷ்மிகளும் அருள்பாலிக்கின்றனர்.

அம்மன் கோயில் உள் பிராகாரத்தில் பரிவார தெய்வங்களாக காத்தவராயன் அவருடைய மந்திரி தொட்டியத்து சின்னான், கருப்பண்ணசாமி மற்றும் கருப்பாயி அம்மன் ஆகியோர் அருள்கின்றனர்.

முருகனின் அவதாரமான காத்தவராயன் பூலோகம் வந்து சாப நிவர்த்தி அடைந்ததாகக் காத்தவராயன் வரலாறு கூறுகிறது. கருப்பாயி அம்மனிடமும் குழந்தை வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு நன்றிக்கடனாக சேலை வாங்கி சமர்ப்பிக்கின்றனர். அம்மன் கோயில் வெளிப் பிராகாரத்தில் பெரியநாயகி, காட்டேரி மதுரை வீரன், உத்தண்டராயர் ஆகியோர் அருள்புரிகின்றனர்.

வல்லாள மகாராஜாவிற்குப் பல நாள்களாகக் குழந்தையில்லை. பல தவங்கள் தானங்கள் செய்தபின் அரசனின் மனைவி கருவுற்றாள். அவள் அம்பிகையின் பக்தை. எனினும் அவளுக்கு மனதில் ஒரு விபரீத ஆசை உண்டாயிற்று. தன் மகன் எவரும் அழிக்க முடியாத இணையில்லா வீரனாக இருக்க வேண்டுமென்று விரும்பினாள். அதோடு தன் மகன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் ஒரு புதிய குழந்தை பிறக்க வேண்டுமென்றும் விருப்பம் கொள்கிறாள்.

சோமவார விரதமிருந்து சிவபெருமானைப் பிரார்த்தனை செய்து தான் வேண்டிய வரத்தையும் பெற்று விட்டாள். பிரசவ காலம் நெருங்கியது. இவள் வாங்கிய வரம் பற்றி அரண்மனையில் இருப்போருக்குத் தெரிந்துவிட்டது.

இதனால் அனைவருக்கும் பயம் ஏற்பட்டது. இந்தக் குழந்தை பிறக்கையில், அந்தக் குழந்தையிடமிருந்து விழும் ரத்தத் துளிகளால் எத்தனை குழந்தை உயிர்த்தெழுமோ, அதனால் என்ன விபரீதம் ஏற்படுமோ எனக் கவலை கொண்டனர்.

ஆனால் அம்பிகை கைவிட்டு விடுவாளா என்ன? அரசி பிரசவ வலி ஏற்பட்டு துடிக்க, அம்பிகை தானே மருத்துவச்சியாக உருமாறி வந்து பிரசவம் பார்க்கிறாள். யாரோ தன் மகனைக் கொள்ள பார்க்கிறார்கள் என்று எண்ணி அரசன் கத்தியோடு உள்ளே வர அரசனையும் வீழ்த்தித் தன் காலடியில் கிடத்தி விடுகிறாள் அம்மன்.

பின் அரசியைத் தன் மடியில் கிடத்தி வயிற்றை விலக்கி, ஒரு துளி ரத்தம் கூட கீழே விழாமல் மழலையை எடுத்து இரு உயிரையும் காக்கிறாள். இவளே, ‘பெரியநாயகி’ என்ற திருநாமத்தோடு இங்கு எழுந்தருளி உள்ளாள்.

கோயிலை ஒட்டி தேவியின் சிலையை மையமாகக் கொண்ட குளமும் உள்ளது. அதனருகே பாம்புப் புற்றும் உள்ளது. அங்கே உள்ள நாகாத்தம்மனை வணங்கினாள் வீட்டில் பாம்புத் தொல்லை நீங்கும். பாம்பு கனவில் வருகிறது என பயப்படுபவர்கள் இங்கே வந்து விளக்கேற்றி வணங்கி நிம்மதி அடைகின்றனர்.

இங்கே ஸ்தல விருட்சமாக வேப்பமரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இந்த மரத்தில் தொட்டில் கட்டி, வளையல்கள் சமர்ப்பித்து அம்மனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். தங்கள் பிரார்த்தனை கைக்கூட அன்னதானமிட்டும், அம்மனுக்குப் புடவை சாத்தியும் வேண்டுகின்றனர். இந்த வேண்டுதலுக்கு அம்மன் விரைவிலேயே நல்ல பலன் தருவாள் என்பது நம்பிக்கை. மணமாகாத கன்னியர்களும் இந்த வேப்பமரத்தைச் சுற்றினால் விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

இங்கே ஸ்தல விருட்சமாக வேப்பமரம் இருந்தாலும், வாசலிலேயே நாகலிங்கப் பூ மரம் பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்த விருட்சத்தைச் சுற்றித் தெற்கு பார்த்த விநாயகரும் வடக்கு பார்த்த ஆஞ்சநேயரும் வடக்கு மேற்கில் ராகு – கேதுவும் உள்ளனர். இந்த மரமே நாகத்தைக் குறிப்பதால் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம் இருப்பவர்கள் இந்த மரத்தை சுற்றி வந்து விளக்கேற்ற தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

அம்மை நோய் நீங்க இங்கு வந்து அங்கப்பிரதட்சனம் செய்து வேண்டுகின்றனர் பக்தர்கள். இந்தக் கோயிலில் ஞாயிற்று கிழமை பால் அபிஷேகம் செய்து அம்மனை வேண்டிக்கொண்டால் ஐஸ்வர்யம் பெருகும், கடம் பிரச்னை நீங்கும் என்கிறார்கள். உடல் உபாதைகளிலிருந்து குணம் வேண்டுபவர்கள் மண்ணிலோ வெள்ளியிலோ செய்த உருக்களை வாங்கிக் காணிக்கையக்ச் செலுத்துகின்றனர். குறிப்பாகக் கண் பாதிப்புகள் உள்ளவர்கள் இங்கே கண்மலர் காணிக்கையாக இட்டு அம்மனை வேண்டிக்கொள்கின்றனர்.

வைகாசித் திருவிழா இங்கு பத்து நாள் உற்சவமாக நடைபெறும். கொடியேற்றம் தொடங்கி, பத்துநாள்கள் சிறப்பாக நடைபெறும் இந்த விழாவில் பல பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்து, தீமிதித்துத் தங்கள் வேண்டுதல்களை அம்மனிடம் வைப்பர். இந்த விழாவின் ஒவ்வொரு நாளும் அம்மன் ஒவ்வொரு ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பாள் என்பது விசேஷம்.

இங்கு நவராத்திரி ஒன்பது நாள்களும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த நாள்களில் கொலு வைத்து, பாட்டுப் பாடி அன்னதானமிட்டு அம்மனை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நாள்களிலும் அம்மனின் அலங்காரம் கண்ணைக் கவருமளவு அழகாய் இருக்கும்.

தாங்கள் மனதில் நினைத்தது அனைத்தும் நிறைவேற்றி தரும் சீதளாதேவி அம்மன் என பக்தர்கள் அம்மனை கொண்டாடுகின்றனர். நோய்கள், கடன் தொல்லை, தொழில் சார்ந்த சிக்கல்கள், திருமணச் சிக்கல், குழந்தையின்மை ஆகிய அனைத்தையும் விலக்கி இன்பம் தரும் இந்த அம்மனைத் துதி பாடி ஆராதிக்கின்றனர். சீதளாதேவியை மனதில் நினைத்தாலே ஆனந்தம் பெருகும், மனம் அமைதி அடையும் என்கிறார் இக்கோயிலின் குருக்கள் ராமண்ணா என்கிற ராமமூர்த்தி.