இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி சரிவு… இறக்குமதியும் 17% வீழ்ச்சி – வர்த்தக அமைச்சகம் தகவல்.!!

டெல்லி : இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் ஜூன் 2023ல் சரக்கு ஏற்றுமதி 22.02% சரிந்து 32.97 டாலர்கள், அதாவது ரூ.2.62 லட்சம் கோடியாக உள்ளது.

கடந்த 2022ல் இதே காலகட்டத்தில் ரூ.3.44 லட்சம் கோடி அளவுக்கு இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் சரக்கு இறக்குமதியும் 17.5% சரிந்து இருப்பதாக வர்த்தக அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தரவுகளின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ரூ.1.64 லட்சம் கோடியாக இருந்தது.

இது கடந்த ஆண்டு ஜூன் மற்றும் மே மாதங்களில் காணப்பட்ட அளவில் இருந்து 8.8% குறைவாகும். எண்ணெய் மற்றும் தங்கம் அல்லாத பொருட்கள் இறக்குமதி கடந்த மே மாதத்தில் 1.7% உயர்ந்த பிறகு ஜூனில் 14.5% சரிந்துள்ளது. தங்கம் இறக்குமதி 82.4% அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பெரிய சந்தைகளில் இந்திய பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நாட்டில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதும் சரக்கு ஏற்றுமதி குறைவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.