நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தீர்ப்பிற்குப் பின்னர்.. பல திருப்பங்களை எதிர்பார்க்கலாம் .!

ஜூன் 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் தான் அதிமுகவின் பிளவு என்பது வெட்ட வெளிச்சமானது.

பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார், அதை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் தவிர முடிவு எடுக்கக்கூடாது என உத்தரவு அளித்தது. ஆனால் கூட்டத்தில் நடந்தது அனைவரும் அறிந்ததே. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவிர்த்து மற்ற அனைத்தும் அரங்கேறியது.

அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சண்முகம் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணை தான் தற்போது நடந்துகொண்டு உள்ளது. கட்சி விதிகளின் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால் ஜூலை 11 இல் பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது, அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் செல்லாது, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என சண்முகம் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

தான் வெல்ல ஒரே ஆயுதம் சட்டம் தான் என, ஆரம்பம் முதலே ஓபிஸ் நம்பி உள்ளார். எம்.ஜி.ஆரின் உயிலின் படி பொருளாளர் பதவியை யாரும் தூக்கி விட முடியாது. அதே போல் 2017 நடந்த வழக்கில் கட்சியும், சின்னமும் ஓபிஸ் இன் கைக்கு தானே வந்தது. இதை எல்லாம் மனதில் வைத்து தான் இபிஎஸ் என்ன செய்தாலும் மவுனம் காத்து வருகிறார் ஓபிஸ்.

சட்டமும் ஓபிஸ் பக்கம் தீர்ப்பு வழங்குமானால், இபிஎஸ்க்கு பெரும்பான்மை இருந்தாலும் கட்சியின் பொருளாளர் என்ற பொறுப்பில் கட்சி முழுமையும் ஓபிஎஸ்ஸுக்கு தான் வரும். இபிஎஸ் கட்சியை சொந்தம் கொண்டாட முடியாது. பின்னர் கடந்த காலத்தில் நடந்தது போல தூதுவிட்டு கட்சிக்காக ஓபிஸ் உடன் தான் சேர வேண்டும்.

ஒருவேளை நீதிமன்றத்தீர்ப்பு இபிஎஸ்க்கு சாதகமாக வருமாயின், சந்தேகமே இல்லை ஜூலை 11 இல் பொதுக்குழுவைக் கூட்டி கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துவிடுவர். அதன் பின்னர் அவர்களின் கைகளில் தான் கட்சி இருக்குமா என்றால் அங்கேயும் இபிஎஸ்க்கு சிக்கல் உள்ளது. கட்சியையும், சின்னத்தையும் முடக்கும் அதிகாரம் ஓபிஸ் இடம் அல்லவா உள்ளது.

ஆக, எப்படி பார்த்தாலும் சிக்கல் என்னவோ இபிஎஸ்க்கு தான். தீர்ப்பு எப்படி வந்தாலும் கட்சியிடம் ஓபிஎஸ்ஸுக்கு உள்ள அதிகாரத்தை யாரும் மாற்றிவிட முடியாது என்ற பேச்சு தான் அரசியல் வட்டாரத்தில் வலுவாக உள்ளது. என்ன நடக்க இருக்கின்றது என பொறுத்திருந்து பார்க்கலாம்.