கோவை தடாகம் ரோடு கணுவாய் காளியூர் சுடுகாடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் கடந்த 1917-ம் ஆண்டு பிறந்தார். தற்போது 106 வயதான கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணம்மாளின் கணவர் ராயப்பர் கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராயப்பன் என்ற மகனும், ராயக்காள் என்ற மகளும் உள்ளனர். ராயப்பன், அவருடைய தங்கை ராயக்காள் ஆகியோருக்கு தலா 3 குழந்தைகள் உள்ளனர். ராயக்காளின் 3. குழந்தைகள் மூலம் 7 பேரன் பேத்திகள் மற்றும் 2 கொள்ளுப்பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணம்மாளின் பிறந்த நாளை கிடா வெட்டி உறவினர்கள் மற்றும் பொது மக்களுக்கு விருந்து கொடுத்து கொண்டாடினர். மேலும் அவர்கள் கிருஷ்ணம்மாளுக்கு பொன்னாடை போர்த்தி கிரீடம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து கிருஷ்ணம்மாளின் குடும்பத்தினர் கூறுகையில், கிருஷ்ணம்மாள் எந்த நோய் பாதிப்பும் இன்றி வாழ்ந்து வருகிறார். அவர், ராகி, சோளம் போன்ற தானிய உணவு வகைகளையே சாப்பிடுகிறார். கீரை கட்டாயமாக சேர்த்துக் கொள்வார். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியமாக இருக்கிறார். எங்களிடம் பாசத்துடன் நடந்து கொள்வார் என்றனர்.