மருந்து கடைகளில் போதை மாத்திரை புழக்கம் அதிகரிப்பு- சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை..!

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக சென்னையில் புதுவிதமான போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தும் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இது கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உரிய மருந்துச் சீட்டு இல்லாமல் யாரும் வலிநிவாரணி மாத்திரைகளை வழங்கக் கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக பல இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்தான் மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- சென்னையில் போதை பொருட்களை ஒழிக்க டிடிஏ என்ற ஆபரேஷன் மூலம் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்து வருகிறோம், அந்த கடத்தல் கும்பலின் வேர் எங்குள்ளது என்பது கண்டுபிடித்து அதை அழிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 580 கிலோ கிராம் கஞ்சா 904 கிராம் மெத்தபெடைமைன். 10 கிலோ ஆசிஷ் எப்பிட்ரின்
மற்றும் கடத்தலுக்கு இடப்பட்ட நான்கு வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளதாகவும் கூறினார். அதேபோல் மெடிக்கல் ஷாப்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 8672 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதிகப்படியான போதை மாத்திரைகள் கூரியர் மூலமாக கொண்டு வரப்படுவதாகவும், அதை தடுக்க கூடிய வகையில் கொரியர் நிறுவன நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகள் விற்பனையை கண்காணித்து, அதில் ஈடுபடுவோரை கைது செய்து வருவதாகவும் அவர் கூறினார். சமீபகாலமாக புதுவிதமான போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், இதை புதுவிதமான திட்டம் கொண்டு தடுக்கப்படும் எனவும் கூறினார். மொத்தத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தால் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும், அதற்கான விழிப்புணர்வு கவுன்சிலிங் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் சட்டவிரோதமாக போதை மாத்திரை விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் குறியீடுகளை மோப்பநாய் உதவியுடன் தேடி வருவதாகவும் அவர் கூறினார். இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு ஹெராயின் கடத்தி வர கூடிய கும்பலை கைது செய்ததால் கடத்தல் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.