கோவை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பு..!

கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சரக்குகள் புக்கிங் செய்யப்பட்டு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. கோவையில் இருந்து முன்பு ஷார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய 3 வெளிநாடுகளுக்கு விமான சேவை இருந்தது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, இலங்கைக்கான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 நாடுகளுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்படும் போதும், பிணைக்கப்பட்ட டிரக் சேவை மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் சரக்குகள் பதிவு செய்யப்பட்டு, பன்னாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து விமான நிலையம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்த நிலையில் சரக்கு போக்குவரத்து நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:- கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பன்னாட்டு போக்குவரத்து பிரிவில் முறையே 119.97 டன், 150.19 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த 2 மாதங்களில் மட்டும் 25.18 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் ஜூன், ஜூலை மாதங்களில், 688.40 டன், 833.28 டன் சரக்கு பதிவு செய்யப்பட்டு 21.05 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. கொரோனா தொற்று மிக வேகமாக பரவிய காலகட்டத்திலும் கோவை விமான நிலையத்தில், சரக்கு போக்குவரத்து பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வந்தது. குறிப்பாக உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசி மற்றும் நோய் தொற்று பரவல் தடுப்புக்கு உதவும் முகக் கவசம், பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பல உபகரணங்கள் தொடர்ந்து கையாளப்பட்டன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.