பழக்கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டு மாற்றிய வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை மாவட்டம் அன்னூர், ஒட்டர்பாளையம், புது காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் ( வயது 32) இவர் அன்னூர் – மேட்டுபாளையம் ரோட்டில் உள்ள வாத்தியார் தோட்டம், பஸ் ஸ்டாப் அருகே பழவியாபாரம் செய்து வருகிறார், நேற்று இரவு இவரது கடைக்கு 2 நபர்கள் வந்தனர். அவர்கள் பழம் வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அதற்குரிய மீதி பணத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு 500 ரூபாய் நோட்டை ரங்கநாதன் சரிபார்த்தார். அப்போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது .இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கடையை உறவினரை பார்க்க சொல்லிவிட்டு பணம் வாங்கிய அவர்களை தனது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்றார். இதையடுத்து அவர்கள் பொகலூர் அருகே ஒரு கடையில் பொருட்கள் வாங்க சென்றனர். இதனால் அவர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை அறிந்த ரங்கநாதன் அதில் ஒருவரை பிடித்து விசாரித்தார், உடனே மற்றொருவர் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார். பிடிப்பட்ட ஆசாமியை அன்னூர் போலீசில் ஒப்படைத்தார்.போலீசார்அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மதுரை, திருமங்கலம், கத்தனேரியைசேர்ந்த சதீஷ் ( வயது 25 ) மற்றொருவர் மதுரை, உசிலம்பட்டி, பக்கம் உள்ள கலங்குபட்டியை சேர்ந்த சிவசந்திரன் (வயது 21)என்பது தெரிய வந்தது. இதில் சதீஷ் தப்பி ஓடிவிட்டார். அவர்களுக்கு கள்ள நோட்டு எங்கிருந்து கிடைத்தது? அன்னூர் பகுதியில் எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் ?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய சதிசை போலீசார் தேடி வருகிறார்கள்.