கோவை தனியார் மருத்துவமனை,கல்லூரி உட்பட 3 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை.!!

கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை ஒரு காரில் வருமான வரி துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினார்கள். மேலும் அங்குள்ள கணினியில் பதிவான விவரங்களை சரிபார்த்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடம் மருத்துவமனை வரவு செலவு தொடர்பான ஆவணங்களை கேட்டு சரிபார்த்தனர். அதன் பின்னர் அந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சிங்காநல்லூரில் உள்ள அதே மருத்துவமனையின் தலைமை அலுவலகத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

இதற்கிடையே மற்றொரு வருமானவரி துறை குழுவினர் மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்று சோதனை நடத்தினார்கள். தனியார் மருத்துவமனை நிர்வாகம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், அது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது .வருமான வரித்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் நடத்திய இந்த சோதனையில் ஆவணங்கள் – பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து வருமான வரி துறையினர் தெரிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கோவையில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனை பொது மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.