சூலூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா: பக்தர்களுடன் சேர்ந்து அன்னதானம் சாப்பிட்ட ஜமாத் நிர்வாகிகள்..!

சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
கோவில் அருகிலேயே இஸ்லாமியர்களின் பள்ளி வாசலும் அமைந்துள்ளது. கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள கோவில் விழாக்குழு சார்பில் அனைத்து கட்சியினர் மற்றும் ஜமாத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கோவில் விழாக்குழுவினரின் அழைப்பை ஏற்று சூலூர் சுன்னத் ஜமாத் சார்பில் ஜமாத் தலைவர் கலீல் ரகுமான், பொருளாளர் சபிக் ரகுமான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சூலூர் நகர செயலாளர் சேக் ஒலி, சூலூர் சுன்னத் ஜமாத் செயலாளர் ஜாகிர் உசேன், இமாம், மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கோவிலுக்கு வந்த ஜமாத் நிர்வாகிகளை கோவில் விழாக்குழுவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஜமாத் சார்பில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கினர். பின்னர் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் ஜமாத்தலைவர்கள், விழாக்குழுவினர், பக்தர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர். இந்த நிகழ்வு பக்தர்கள் மத்தியில் பெரும் நல்ல வரவேற்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. கோவையில் இது போன்ற நிகழ்ச்சிகளில் மத நல்லிணக்கம் காணப்படுவது வர வேற்கத்தக்கது என பக்தர்கள் தெரிவித்தனர்.