கோவையில் 74 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்- 8,967 மாணவ, மாணவிகள் பயன் பெறுவர்..!

கோவை: தமிழகத்தில் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் வரும் 15-ந் தேதி
மதுரையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க
உள்ளார்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காலை உணவு திட்டம் மாநகராட்சியில் 62
பள்ளிகள், மேட்டுப்பாளையத்தில் 9 பள்ளிகள், மதுக்கரையில் 3 பள்ளிகள் என
மொத்தம் 74 பள்ளிகளில் தொடங்கப்படுகிறது. இதன்மூலம் 1-ம் வகுப்பு முதல்
5-ம் வகுப்பு படிக்கும் 8,967 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.
இந்த உணவுகள் தயாரிக்க தனியாக சமையல் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி பள்ளிகளுக்கு உணவு தயாரித்து சப்ளை செய்ய கண்ணம்பாளையத்தில்
சமையல் கூடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு காலையில் 6 மணிக்குள்
உணவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பள்ளிகளுக்கு சிறப்பு வாகனங்கள்
மூலம் அனுப்பப்படும். பள்ளிகளில் காலை 7.45 மணிக்குள் உணவு வந்து சேரும். இந்த உணவு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் காலை 8.30 மணியளவில் வழங்கப்பட உள்ளது. பள்ளியில் மாணவர்கள் காலை உணவு சாப்பிட்ட பின்னர் வகுப்பறைக்கு சென்று படிக்கலாம். அரசின் காலை உணவு திட்டத்திற்கு மாணவ, மாணவிகள் மற்றும்
பெற்றோரிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தின் உணவு தயாரிக்கும்
பொறுப்பை ஏற்று உள்ள கண்ணம்பாளையம் தனியார் உணவு தயாரிக்கும் நிறுவனம்
உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான சோதனை முறையை அந்த
நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிறுவனத்தில் உணவு தயாரிக்கக் கூடிய முறைகளை கலெக்டர் சமீரன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திட்ட ஆணையர் தரேஷ் அகமது ஆகியோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
சிற்றுண்டியின் தரம் மற்றும் தயாரிக்ககக்கூடிய முறைகளை இருவரும்
கேட்டறிந்தும் மாணவர்களுக்கு கொடுக்கக்கூடிய உணவை சுவைத்துப் பார்த்து
தரத்தை ஆய்வு செய்தனர். பின்னர் ஊராட்சித் துறை ஆணையர் தரேஷ் அகமது கூறும்போது, உணவு கூடத்தில் செய்யப்படும் உணவுகள் தரம் , அவை குறித்த நேரத்தில் பயனாளிகளுக்குச் செல்கிறதா? என்பது குறித்தும், சுத்தம் மற்றும்
சுகாதாரமான உணவு தருவதற்காக, உணவு செய்பவர்களிடம் ஆலோசனை வழங்கினோம்.
62 பள்ளிகளுக்கு இங்கிருந்து உணவுகள் எடுத்துச் செல்லப்பட உள்ளது.
அதற்கான வாகனங்கள் செல்லும் நேரங்கள் குறித்தும், எவ்வாறு செல்ல வேண்டும்
என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினோம் என்றார்.இந்த ஆய்வின்போது
பேரூராட்கள் உதவி இயக்குனர் துவாரகாநாத் சிங் மற்றும் அதிகாரிகள்
உடனிருந்தனர். இந்த நிலையில் ஊராட்சி மற்றும் பள்ளி அளவில் கண்காணிப்பு குழு அமைக்க உள்ளது. 12-ந் தேதிக்குள் கண்காணிப்பு குழுக்களை அமைத்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள், உணவு சமைக்க
தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உதவிக்குழு உறுப்பினர்களை அழைக்க உள்னர்.