இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் – சென்னை மாநகராட்சி முடிவு ..!

சென்னை மாநகரப் பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாலைகளில் ஆங்காங்கே குப்பைதொட்டிகள் அமைத்தல், சாலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவோர் மற்றும் பொதுச்சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவோர் ஆகியோரிடம் அபராதம் வசூலித்தல் போன்றவற்றை கடைபிடித்து வருகின்றனர். மேலும், சாலையோர பூங்காக்கள், சாலை திட்டுக்கள், மேம்பால சுவர்கள் ஆகியவை அழகுபடுத்தப்பட்டும் வருகின்றன.

இதுமட்டுமின்றி சென்னை மாநகரில் அமைந்துள்ள 18 சாலைகள், இன்று முதல் குப்பை இல்லாத சாலைகளாகப் பராமரிக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சியை திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழித்தல் இல்லாத மாநகரமாக மாற்றும் நடவடிக்கையில், மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக இதற்கு தேவையான போதுமான அளவிலான கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

மேலும், மாநகராட்சி சட்ட விதிகளின் கீழ் ஏற்கெனவே உள்ள, பொது இடங்களில் சிறுநீர் கழிப்போருக்கு ரூ.50 அபராதம் விதிக்கும் முறையை மீண்டும் தீவிரமாக அமலுக்குக் கொண்டு வரும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிப்பது, பிளாஸ்டிக் தடை அமல், கொசு ஒழிப்புப் பணி போன்ற பணிகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், சிறுநீர் கழிப்போருக்கு அபராதம் விதிக்கும் பணியை யாரிடம் வழங்குவது என மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.