சிவி சண்முகத்தை கண்டு கொள்ளாத அதிமுகவினர்.. மேடையை விட்டு கீழே சென்றதால் பரபரப்பு..!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை யாரும் கண்டு கொள்ளாததால் மேடையை விட்டு கீழே இறங்கி சென்றார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று வேப்பம்பாளையத்தில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் சிவி சண்முகமும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்தார். ஆனால் அவரை யாரும் கண்டு கொள்ளாததால் மேடை ஓரத்தில் அமர்ந்திருந்த அவர் பின்னர் மேடையை விட்டு கீழே இறங்கி சென்றார். அதனை கண்ட முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சிவி சண்முகத்தை சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தனர். மேடையில் அமர்ந்திருந்த அனைவரையும் சிவி சண்முகம் கும்பிட்டு வணக்கம் சொல்லி சென்ற போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டு கொள்ளாமல் மேடையில் மற்றொருபுறத்தின் ஓரத்தில் அமர்ந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட போது மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன தூங்கி வழிந்தார்.