பல ரகசியங்களை பகுதி பகுதியாக வெளியிடுவேன்… தீயசக்தி எடப்பாடி!! புது பட்டம் சூட்டி புகழேந்தி பரபரப்பு பேச்சு..!!

சேலம்: எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் வெளியிடப்படும் என ஓ.பி.எஸ். ஆதரவாளரும், அதிமுக முன்னாள் நிர்வாகியுமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, இன்றுமுதல் தீய சக்தி பழனிசாமி என அழைக்கப்படுவார் என கடுமையாக விமர்சித்தார்.

ஓ.பி.எஸ். ஆதரவாளரான முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி, எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், தற்போது, எடப்பாடி பழனிசாமிக்கு, தீய சக்தி பழனிசாமி என பட்டம் வழங்கியுள்ளார் புகழேந்தி.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகியும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான புகழேந்தி, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே எடப்பாடி பழனிசாமியை யாரும் வரவேற்கவில்லை என விமர்சித்தார்.

அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகளான செங்கோட்டையன், செம்மலை போன்ற அண்ணன்கள், எடப்பாடி பழனிசாமி பின்னால் நின்று எப்படி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. செங்கோட்டையன் வேறு, தற்போது ஜாதிப் பற்றி பேச ஆரம்பித்துள்ளார் என குறிப்பிட்டார். இந்த கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகியான தீரன் சின்னமலை, தூக்கு கயிறை நீ தொடாதே என்று சொல்லி, தன்னுடைய கழுத்தில் அவரே மாட்டிக்கொண்டு வரலாறு படைத்தார்.

தியாகி தீரன் சின்னமலையின் பரம்பரையைச் சேர்ந்தவர்களே, எடப்பாடி பழனிசாமியை வரவேற்கவில்லை. கொங்கு சமுதாயத்தைச் சேந்தவராக எடப்பாடி பழனிசாமி இருக்க முடியாது. ஜாதிப் பெயரை சொல்லி அரசியல் செய்கிறீர்களா? எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்றைக்காவது ஜாதியை பற்றி பேசி உள்ளார்களா? என புகழேந்தி கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிசாமியின் பின்புறமாக யார் யார் உள்ளார்கள் என்பதும், யார் சொல்லி இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதும் வெளியில் வரும். அவரைப் பற்றிய பல ரகசியம் உள்ளது. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது என்னென்ன துரோக செயல்கள் செய்தீர்கள் என்று அனைத்து உண்மைகளையும் பகுதி இரண்டாக வெளியிடுவேன்.

எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால், தற்போது உள்ள எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடத் தயாரா? நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். யார் ஜெயிப்போம் என்று பிறகு தெரியும் என புகழேந்தி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி என்று அழைக்கப்படும இந்த பழனிசாமி, எதிரியாக கருதி, அரசியல் ரீதியாக இன்று முதல் தீயசக்தி பழனிசாமி என்று அழைக்கப்படுவார் என்று புதிய பட்டத்தை வெளியிட்டு, அதற்கான துண்டு பிரசுரத்தையும் புகழேந்தி வெளியிட்டார்.