நாளை அமெரிக்கா செல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்காவுக்கு இரண்டு வார பயணம் மேற்கொள்கிறார். மேலும் அங்குள்ள தமிழர்களை சந்தித்து, அவர்களது பிரச்னைகள் குறித்து கேட்டறியவுள்ளார்.

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். அன்று முதல் கட்சிப்பணிகள், தமிழ்நாடு & தமிழர் நலன் தொடர்பான விவகாரங்களில் தீவிரம் காட்டி வரும் அண்ணாமலை, இரண்டு வாரப் பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார்.

தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்லும் அண்ணாமலை, அமெரிக்க வாழ்
தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து கேட்டறியவும் உள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், மலையக தமிழர்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மத்திய அரசிடம் வலியுறுத்தி உரிய உதவிகளை செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

அண்ணாமலையின் இலங்கை பயணத்தின் விளைவாக, அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி முற்றிய சூழலில், தமிழர்கள் உட்பட இலங்கை மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், எரிபொருள், மருந்துகள் உள்ளிட்டவற்றை மத்திய அரசு பெருவாரியாக வழங்கியது.

இந்நிலையில், இரண்டு வார பயணமாக அமெரிக்கா செல்லும் அண்ணாமலையின்
முயற்சியால், அமெரிக்க வாழ் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் இருந்து வேலைவாய்ப்பு, மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்வோருக்கும் தூதரக ரீதியிலான உதவிகள் மேலும் அதிகமாவதற்கான வாய்ப்பு மேலோங்கியே காணப்படுகிறது. அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அக்டோபர் 12ஆம் தேதி அண்ணாமலை தாயகம் திரும்புகிறார்.