அதிமுக சார்பாக வெள்ளி கவசம் நான் தான் கொடுத்தேன்- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!

சும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் 59ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று சென்னை, நந்தனத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் தெரிவித்தாவது, “முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பாக அம்மா வழங்கிய தங்க கவசத்தை, 25 நாட்களுக்கு முன்பாகவே நாங்கள் வங்கியில் விண்ணப்பித்து கோரி இருந்தோம்.

ஆனால் நான்தான் பொருளாளர் என்று பழனிசாமி தரப்பில் இருந்து கோரிக்கை வைத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையை அவர்கள் அணுகினார்கள். அப்போது எங்களுடைய வாதத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது.

எங்களுடைய கோரிக்கையின் அடிப்படையில் இருக்கின்ற நியாயத்தை உணர்ந்து, தங்கக் கவசம் அறக்கட்டளையின் தலைவரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதிமுக சார்பாக ஐயா அவர்களுக்கு இன்று நாங்கள் வெள்ளி கவசம் கொடுத்து இருக்கிறோம். அறங்காவலர்கள் தங்களது பொறுப்பில் வைத்துக் கொண்டு, எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஐயாவுக்கு அணிவிக்கலாம். ஏனென்றால் நாங்கள் கவசத்தை கோவில் நிர்வாகத்திடமே கொடுத்துவிட்டோம்” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் அதிமுக சார்பாக இந்த வெள்ளி கவசம் கொடுக்கப்பட்டதா? அல்லது ஓ பன்னீர்செல்வம் என்ற தனிப்பட்ட நபர் கொடுத்ததா? என்ற கேள்வி எழுப்பினார். அதற்க்கு பதில் அளித்த ஓபிஎஸ், “நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர். அந்த அடிப்படையில் அதிமுக சார்பாக இதனை நான் வழங்கி இருக்கிறேன்” என்றார்.

மேலும், அடுத்த குரு பூஜையின் போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவுகள் சரியாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “ஏற்கனவே நாங்கள் அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். கழகத்தினுடைய ஒன்றரை கோடி தொண்டர்களும் இணைய வேண்டும், இணைய வேண்டும், இணைய வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறோம்” என்றார்.