மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி இதோ.. குறைகிறது டோல்கேட் கட்டணம்..!!

த்திய அரசு புதிய டோல்கேட் கட்டண கொள்கையை வரையறை செய்து வருகிறது. அதன்படி டோல்கேட்களில் தற்போது உள்ளதை விட டோல்கேட் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டு அறிமுகம் செய்யப்பட்டு, அதில் தானியங்கி முறையில் இந்த டோல்கேட்கள் செயல்படும்படி மாற்றப்பட்டுவிட்டன. இந்த சுங்கச்சாவடி கட்டணம் என்பது சாலைகளின் பராமரிப்பு செலவுகளுக்காக வசூலிக்கப்படுகின்றன.

அதாவது வாகனங்கள் குறிப்பிட்ட சாலையைப் பயன்படுத்துவதால் சாலைக்குச் சேதாரம் ஏற்படுகிறது. அந்த சேதாரத்தை ஈடுகட்டி தரமான சாலைகளை என்றும் வைத்திருக்க அரசு சுங்க கட்டணங்களை வசூலிக்கிறது. இந்நிலையில் முதலில் பணம் செலுத்தினால் அதன் மூலமே சுங்கச்சாவடிகளைக் கடந்து விடலாம் என்ற நிலையில் அதில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்பதால் அனைத்து வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் கார்டுகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது பாஸ்ட் டேக் கார்டுகள் இல்லாத வாகனங்கள் இரண்டு மடங்கு அதிகமாகப் பணம் கட்டினால் மட்டுமே அனுமதி என்ற நிலை இருக்கிறது. டோல்கேட்களில் கூட்டத்தைக் குறைக்க ஃபாஸ்ட் டேக் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதற்கான பலன் பெரிய அளவில் இல்லை. இந்நிலையில் மத்திய அரசு தற்போது டோல்கேட் கட்டண வசூலிற்காக புதிய பாலிசி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே தற்போது உள்ள டோல்கேட்கள் அகற்றப்பட்டு நேரடியாக நம்பர் பிளேட் ரீடிங் கேமராக்கள், அல்லது ஜிபிஎஸ் முறையில் டோல்கேட் கட்டணங்களை வசூலிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாகப் பல செய்திகளைப் படித்திருப்போம். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு மத்திய போக்குவரத்துத் துறை சார்பில் புதிய டோல்கேட் கட்டண வசூலுக்கான பாலிசி கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

இதற்காக புதிய கொள்கைகளில் தற்போது உள்ள விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது உள்ள விதிமுறைகளின் படி குறிப்பிட்ட சாலைகளில் குறிப்பிட்ட ரக வாகனங்கள் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பதைப் பொருத்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாகச் சிறிய காருக்கும் சரி பெரிய காருக்கும் சரி ஒரே மாதிரியான கட்டணம் தான்.

ஆனால் தற்போது வரவுள்ள புதிய விதிமுறைகளின்படி குறிப்பிட்ட வாகனத்தின் அளவு, எடை, அது சாலையில் பயணிக்கும் போது சாலையில் எவ்வளவு அழுத்தத்தை வழங்கும் என்பதைப் பொருத்து இந்த கட்டண நிர்ணயம் என்பது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதற்காக வானங்களைத் தரம் பிரிக்கும் பணி தற்போது நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பணியில் வாரணாசி பல்கலைக்கழக மாணவர்களின் உதவியை மத்திய போக்குவரத்து துறை நாடியுள்ளது. இவர்கள் தற்போது புதிய விதிமுறையை டோல்கேட் கட்டணத்தை முறைப்படுத்த வாகனங்களைத் தரம் பிரிக்கும் முயற்சியில் எந்த ரக வாகனங்களில் சாலைகளில் எந்த அளவிற்குச் சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இவர்கள் ஒரு முடிவுக்கு வரும் பட்சத்தில் புதிய டோல்கேட் கட்டண வசூல் பாலிசி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டோல்கேட் கட்டண பாலிசியால் தற்போது உள்ள டோல்கேட் கட்டணத்திலிருந்து சிறிய ரக கார்களுக்கு கட்டணம் குறையும், மேலும் புதிய விதிமுறையால் சாலையை எவ்வளவு பயன்படுத்தினோமோ அதற்கு ஏற்றார் போல் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிடில் மக்களுக்கு பெரும் நற்செய்தியாக இருக்கும்.

பொதுவாகச் சிறிய ரக கார்களை மிடில்-கிளாஸ் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எஸ்யூவி ரக கார்களை பெரும் பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்துகின்றனர். இதனால் மிடில்-கிளாஸ் மக்களுக்கு டோல் கேட் கட்டணம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஜிபிஎஸ் பேஸ்டு டோல்கேட் கட்டண முறை நடைமுறைக்கு வரவேண்டும்.