வால்பாறையில் தொடர்ந்து 4வது நாளாக கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!!

வால்பாறை : வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4ம் நாளாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சோலையார் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4வது நாளாக அடை மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாகவும், சூறாவளியாலும் மரங்கள் சாய்ந்தும், மின்தடை ஏற்பட்டும் உள்ளது.

இந்நிலையில் நேற்று வில்லோணி மற்றும் மானாம்பள்ளி சாலை பிரச்னையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. வால்பாறை டவுனில் மழை பதிவு குறைவாக பெய்கிறது. எஸ்டேட் பகுதிகளில் கடும் மழையாக பெய்து வருகிறது. 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்களில் இருந்தே வால்பாறை டவுனிற்கு மாணவர்கள் வருகிறார்கள். எஸ்டேட் பகுதிகளில் கடும் மழை பெய்வதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

மழை அளவு வருமாறு: வால்பாறை பகுதியில் சின்னகல்லார் 116 மிமீ, நீரார் அணை 82 மிமீ, சோலையார் அணை 72மிமீ, வால்பாறை 71 மிமீ மழை பதிவாகி உள்ளது. 165 அடி நீர் மட்டம் கொண்ட சோலையார் அணையில் காலை நிலவரப்படி 106,5 அடிநீர்மட்டம் உள்ளது.