முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர்..? படைகளைக் குறைக்க ரஷ்யா ஒப்புதல்.!!

கீவ்: உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் படையைக் குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தொடங்கிய போர், 4 வாரங்களைக் கடந்து 5ஆவது வாரமாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை..

உக்ரைன் நாட்டில் உள்ள கீவ், கார்கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் உக்ரைன் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருபுறம் போர் தொடரும் நிலையிலும், மறுபுறம் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இருநாடுகளுக்கும் இடையே இன்று இரண்டாம் கட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் படையைக் குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கீவ் அருகே செர்னிவ் பகுதியில் ரஷ்யப் படையைக் குறைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கீவ், செர்னோபில் பகுதிகளிலும் ராணுவ நடவடிக்கைகளைக் கணிசமாகக் குறைப்பதாக ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது. துருக்கி நாட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் வடக்கு நகரமான செர்னோபில் ஆகியவற்றில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்க ரஷ்யா சம்மதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த விளாடிமிர் மெடின்ஸ்கி கூறுகையில், “மோதலைத் தணிக்க நாங்கள் இந்த இரண்டு நடவடிக்கையை எடுக்கிறோம்.

கடந்த காலங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பெரியளவில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் காலத்தில் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதில் ரஷ்யா எந்தவொரு எதிர்ப்பையும் காட்டாது என்றும் ரஷ்யா பேச்சுவார்த்தை குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் தான், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது தொடர்பான விண்ணப்பத்தைக் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போரில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வரும் நாட்களில் போர் நிறுத்தம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.