கோவை, நீலகிரியில் கடும் பனிமூட்டம் – ஜில்..ஜில்.. என்று மாறிய வானிலை..!

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக காலநிலை முற்றிலும் மாறிவிட்டது.
காலநிலை மாற்றத்தால் சாலைகள், குடியிருப்பு பகுதிகள், தேயிலைத் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. அத்துடன் கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

குளிரால் மக்கள் வெளியில் வரவே சிரமம் அடைந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க மக்கள் சுவர்ட்டர் அணிந்து வருகின்றனர். ஆட்டோ, கார் டிரைவர்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். ஊட்டி, குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலை, கோத்தகிரியில் இருந்து குன்னூா், ஊட்டி செல்லும் சாலை, ஊட்டி நகர பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பனிமூட்டம் காணப்பட்டது. அத்துடன் சாரல் மழையும் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து கொண்டே இருந்தது.

கடும் பனிமூட்டத்தால் சாலையில் எதிரில் வந்த வாகனங்கள் சரிவர தெரியவில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஒட்டி சென்றனர். அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், தேயிலை தோட்ட தொழிலாளர்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.

கோவையிலும் கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான காலநிலை நிலவி வருகிறது. நேற்று காலை முதல் வெயில் இல்லாமல் மேகமூட்டமாகவே காட்சி அளித்தது. இரவில் திடீரென சாரல் மழை பெய்தது. நள்ளிரவு வரை சாரல் மழை நீடித்தது. இந்த திடீர் மழையால் இன்று காலை கடும் பனிமூட்டமும், குளிரும் நிலவியது. காலை 7 மணியை தாண்டியும் பனிமூட்டமாகவே காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பனிமூட்டத்துடன் குளிரும் வாட்டி வதைக்கிறது.