வேலையை வேகமாக செய்ய கூறிய இறைச்சி கடை காசாளருக்கு அரிவாள் வெட்டு- தொழிலாளி கைது..!

கோவை போத்தனூர் ஸ்ரீனிவாச நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 69). இவர் பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள இறைச்சி கடையில் 20 வருடங்களாக காசாளராக வேலை செய்து வருகிறார்.

அந்த இறைச்சி கடையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த கதிர்வேல் (21) என்பவர் இறைச்சி வெட்டும் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல இறைச்சி கடையில் 2 பேரும் வேலை செய்து கொண்டு இருந்தனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கிருஸ்துமஸ் என்பதாலும் கடையில் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது கதிர்வேல் வேலையை மெதுவாக செய்து கொண்டு இருந்தார்.இதனை பார்த்த வேலாயுதம் அவரிடம் வேலையை வேகமாக செய்யும் படி கூறியுள்ளார். ஆனால் கதிர்வேல் தொடர்ந்து வேலையை மெதுவாக செய்து கொண்டு இருந்தார்.

இதுகுறித்து வேலாயுதம், கதிர்வேலிடம் கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கதிர்வேல் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி இறைச்சி வெட்டும் அரிவாளை எடுத்து வேலாயுதத்தை வெட்டினார்.அரிவாள் வெட்டில் அவருக்கு காது, கழுத்து, வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து வேலாயுதம் பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கதிர்வேலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.