கோவை-ராமேஸ்வரம் ரயில் சேவையில் நாளை மாற்றம்..!

கோவை: மோசமான வானிலை காரணமாக கோவை-ராமேஸ்வரம் ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிக சப்தம் எழுவதால் அது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த சில நாட்களாக அந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் மோசமான வானிலை காரணமாக பாம்பன் ரயில்வே பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, கோவையில் இருந்து நாளை (27-ந் தேதி) இரவு 7.45 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட்டுச் செல்லும் வாராந்திர ரயில் (எண்:16618), ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில், கோவையில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.ராமேஸ்வரத்தில் இருந்து நாளை மறுநாள் (28-ந் தேதி) இரவு 7.10 மணிக்கு கோவை புறப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:16617), ராமேஸ்வரத்துக்குப் பதில் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.
இந்த ரயில், ராமேஸ்வரம்-ராமநாதபுரம் இடையே இயக்கப்படாது. ராமநாதபுரத்தில் இருந்து இந்த ரயில் கோவை புறப்பட்டு வரும். இந்த ரயில்கள் குறித்த விவரங்களை ராமேஸ்வரத்தில் 93605 -48465 என்ற உதவி எண்ணிலும், மண்டபத்தில் 93605-44307 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு பயணிகள் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.