பசுமை மின்சார உற்பத்தி துறை ஒரு தங்கச் சுரங்கம்- முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு..!

புதுடில்லி, :மாசு ஏற்படுத்தாத பசுமை மின்சார உற்பத்தித் துறை தங்கச் சுரங்கம் போன்றது.
இத்துறையில் முதலீடு செய்ய மிகப் பெரும் வாய்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்தத் துறைக்கு அதிக முக்கியத்தும் தரப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக இணைய வழி கருத்தரங்குகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான ஆலோசனைகள், யோசனைகள் கேட்டு இந்தக் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

இதன்படி முதல் இணையக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில், பசுமை எரிபொருள் தொடர்பாக, பிரதமர் மோடி கூறியதாவது:பருவநிலை மாறுபாடு, புவி வெப்பமடைதல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக, பசுமை எரிபொருள் அமைந்துள்ளது. மாசு ஏற்படுத்தாத இந்த எரிபொருள் உற்பத்தித் துறையில் மிகப் பெரும் வாய்ப்புகள் உள்ளன.கடந்த ௨௦௧௪ முதல், இத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல திட்டங்கள், அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. உலக அளவில் பசுமை எரிபொருள் உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் உள்ளது.பசுமை எரிபொருள் உற்பத்தி துறை தங்கச் சுரங்கம், எண்ணெய் கிணறு போன்றது. சூரிய மின்சக்தி, காற்றாலை, ‘பயோகாஸ்’ எனப்படும் சாணத்தில் இருந்து மின்சாரம் என, முதலீடுகளுக்கு பல வாய்ப்புகள் உள்ளன.இதன்படி, இந்த பட்ஜெட்டில், பசுமை எரிபொருள் உற்பத்திக்கு ஊக்கம் தரும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட் ஒரு வாய்ப்பு மட்டுமல்ல; எதிர்கால பாதுகாப்புக்கான உறுதிமொழி.இவ்வாறு அவர் கூறினார்.