கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக பச்சை கொடி காட்டியுள்ளது- பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து..!

சென்னை: ஒன்றிய அரசின் 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளது என தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ் மாநில தலைவர்): நடைபெறவுள்ள மாநில சட்டமன்றப் பேரவை தேர்தல்களை மனதில் கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார். பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பர்களின் வருவாய் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): இந்திய அரசு வேலை வாய்ப்பு அளிப்பதை கைகழுவி விட்ட நிலையில் சிறு-குறு நடுத்தர தொழில்களே உள்ளூர் அளவிலான பொருளாதார நடவடிக்கைகளுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் ஆதாரமாக உள்ள நிலையில் சிறு-குறு, நடுத்தர தொழில்களுக்கான எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் இந்த அரசால் முன்வைக்க முடியவில்லை.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட், மாநில செயலாளர்): வருமானவரி எல்லைக்குள் இருப்போர் வரிவிலக்கு பெறும் உச்சவரம்பு ஆண்டு வருமானம் ரு.5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. கர்நாடக மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி வழங்கும் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி ஜிஎஸ்டி இழப்பீடு உட்பட மாநிலத்திற்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க மறந்து விட்டது. மொத்தத்தில் வாக்களித்து அதிகாரம் வழங்கிய வாக்காளர்களையும், நாட்டின் குடிமக்களையும் வழக்கம் போல ஏமாற்றியுள்ள நிதிநிலை அறிக்கை, அதிகார மையத்தில் அழுத்தம் தரும் பன்னாட்டு நிதி மூலதன சக்திகளின் கார்ப்பரேட் குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக பச்சை கொடி காட்டியுள்ளது.

அன்புமணி (பாமக, தலைவர்): நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

டிடிவி.தினகரன் (அமமுக, பொது செயலாளர்): நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி தருவது பற்றிய அறிவிப்பு இல்லை.

சரத்குமார் (சமக, தலைவர்): உணவுப்பொருட்கள் மீதான வரிக்குறைப்பு, நிறுத்தப்பட்ட சமையல் எரிவாயு மானியம் மீண்டும் செயலாக்கம் செய்வது குறித்த எதிர்பார்த்த முக்கிய அறிவிப்புகள் ஏதும் இல்லாததால் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு பயனுள்ளதான பட்ஜெட்டாக இல்லை. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.